இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களை கொண்ட இத்தொகுதியில், அதிமுக, திமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 4 அரசியல் கட்சி வேட்பாளர்களும், பதிவுபெற்ற 8 கட்சிகளின் வேட்பாளர்களும், 47 சுயேட்சை வேட்பாளர்களும் களம் காண்கின்றனர். வாக்குப்பதிவுக்காக 256 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், 1,600 வாக்குப்பதிவு இயந்திரங்களும், அதனுடன் 295 கண்ட்ரோல் யூனிட்டுகளும் பயன்படுத்தப்படுகின்றன. யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விதமாக ஒப்புகைச்சீட்டு வழங்க 320 வாக்கு இயந்திரங்கள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளன.
ஆர்.கே.நகர் தொகுதியைப் பொறுத்தவரை அனைத்துமே பதற்றமான வாக்குச்சாவடி என்ற அடிப்படையிலேயே கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் பணிகளில் 3,000-க்கும் மேற்பட்ட காவலர்கள், 9,50 துணை ராணுவ படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரு வாக்குப்பதிவு மையத்தில் 15 துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் பணியாற்றும் நடைமுறை குறித்து 1,860 தேர்தல் பணியாளர்களுக்கு, தேர்தல் ஆணையம் சார்பில் 4 கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. பரப்புரை ஓய்ந்துள்ளதால், ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளருக்கு ஆதரவாக யாரும் வாக்கு சேகரிக்கக்கூடாது என்றும், வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசியல் விளம்பரங்கள் செய்யக்கூடாது என்றும், கருத்துகணிப்புகள் வெளியிடுவதற்கும், ஊடகங்கள் தேர்தல் பரப்புரை செய்தி வெளியிடுவதற்கும், சமூக வலைத்தள பதிவு உள்ளிட்டவற்றுக்கும் தேர்தல் ஆணையம் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.