18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி, தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேர் ஆளுநரிடம் தனித்தனியே கடிதம் அளித்தனர். அதனைத்தொடர்ந்து ஆளுநரிடம் கடிதம் அளித்தவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக தலைமை கொறடா ராஜேந்திரன், கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்திருந்தார். அதன்பேரில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களை கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி எம்.சுந்தரும் ஜனவரி 23ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் மதுரை கிளையில் வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி எம்.சுந்தர் இன்று சென்னைக்கு வருகிறார். மதுரை கிளையில் பட்டியலிடப்பட்டுள்ள இன்றைய வழக்குகளை முடித்த பின்னர் இரவில் நீதிபதி சுந்தர் சென்னை வருகிறார். நாளை மதுரை கிளை பணிபுரியும் நாளாக இருக்கும் நிலையில் நீதிபதி சுந்தர் சென்னை வருவது தகுதி நீக்க வழக்கின் தீர்ப்புக்கான வாயப்புகளை அதிகரித்துள்ளது. தலைமை நீதிபதி தரப்பிலும் தயாராக இருக்கும்பட்சத்தில், அவர் ஒப்புதல் அளித்தால் நாளை தீர்ப்பு அறிவிக்க வாய்புள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.