டிசம்பர் 12 - இன்றைய வானிலை குறித்து சுயாதீன வானிலை ஆய்வாளரான ஹேமசந்திரன் கொடுத்த தகவலை பார்க்கலாம்..
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக மாறி, தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களின் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையைப் பொருத்தவரையில் நேற்று முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது.
இது குறித்து சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறுகையில்,
“டெல்டா மாவட்டங்களில் நேற்று கனமழை, மிக கனமழை பதிவாகி இருக்கிறது. அதிகபட்டசமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் 18 செ.மீ. மழை பதிவாயியுள்ளது. தவிர, மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்களிலும் கனமழை பதிவாகி இருக்கிறது.
மேலும் தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் விட்டு விட்டு மழையை எதிர்பார்க்கலாம். ஒட்டு மொத்தத்தில் தமிழ்நாடு முழுவதுமே பரவலாக மழைக்கான வாய்ப்பு இன்று நிலவுகிறது.
இன்றைய தினம் திருவண்ணாமலையில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது. நாளைய தினம் பரவலான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் தீபம் ஏற்றப்படும் நேரத்தில் மழைக்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. அதேநேரம் மழைக்காரணமாக எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
சென்னையின் தெற்கு பதியில் பரவலாக மழை காணப்படுகிறது. அதே போல் இன்று பிற்பகலில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக நாளை காலை வரை சென்னையில் மழை இருக்கும்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது மன்னார் வளைகுடா அதன் ஒட்டிய பகுதியில் நிலைக்கொண்டுள்ளது. இது வலுவிழந்து மேற்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தூத்துக்குடி, தென்காசி கன்யாகுமரி போன்ற பகுதிகளில் மழை அதிகம் பெய்ய வாய்ப்பு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.