தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு பிறகு அனல் காற்றின் தாக்கம் குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளையும் அனல் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இயல்பை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகவே காணப்படும் என்பதால், காலை 11 மணி முதல் 3 மணி வரையில் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் சென்னை உள்பட 14 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட் அளவை தாண்டி வெப்பநிலை பதிவானது.
சென்னை மீனம்பாக்கம், திருத்தணியில் 108 என்ற அளவிலும், நாகை, நுங்கம்பாக்கத்தில் 106 என்ற அளவும், மதுரையில் 105 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவிலும் வெப்பம் பதிவாகியுள்ளது. வேலூர், திருச்சி, மதுரை தெற்கு, புதுச்சேரி பரங்கிப்பேட்டை, காரைக்கால், கரூர் பரமத்தி, தொண்டி, கடலூர் ஆகிய இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவைத் தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது.