தமிழ்நாடு

கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?

நிவேதா ஜெகராஜா

கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் தக்காளி விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி கோயம்பேடு மார்கெட்டில் மொத்த விலையில் இரண்டாம் ரகம் தக்காளி (ஒரு கிலோ) 50 ரூபாய் என்றும், முதல் ரகம் தக்காளி (ஒரு கிலோ) 60 ரூபாய் என்றும் விற்கப்படுகிறது. சில்லறைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 முதல் 70 ரூபாய்க்கு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் கோயம்பேடு சந்தைக்கு 60 லிருந்து 70 வாகனங்களில் டன் கணக்குகளில் தக்காளிகள் இறக்குமதி செய்யப்படும் நிலையில், கடந்த வாரத்தில் பெய்த மழையின் காரணமாகவும் பெட்ரோல் டீசல் விலை உயர்வாலும் தக்காளி வரத்து குறைந்து வந்தது. இவற்றுடன் உற்பத்தி குறைவும் ஏற்பட்டதால், சென்னை கோயம்பேடு காய்கறி அங்காடியில் தக்காளியின் வரத்து வெகுவாக குறைந்து விலை உயர்ந்து காணப்பட்டது.

குறிப்பாக கடந்த வாரத்தில் தக்காளியின் விலை ஒரு கிலோ 120 ரூபாய் வரை சில்லறை கடைகளில் விற்கப்பட்ட நிலையில், தற்போது மத்திய அரசு டீசல் விலையை குறைத்துள்ளதால் கோயம்பேடு காய்கறி அங்காடிக்கு தக்காளி வரத்து அதிகரித்து. இதனால் தக்காளியின் விலை குறைந்துள்ளது. அந்தவகையில் தக்காளியின் விலை (ஒரு கிலோ) ரூபாய் 50 முதல் 60 ரூபாய் வரை இன்று விற்கப்படுகிறது. அதேபோல் சில்லரை கடைகளில் தக்காளியின் விலை (ஒரு கிலோ) 60 முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.