தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது சுங்கக்கட்டண உயர்வு - தொடங்கியது வசூல்!

Sinekadhara

தமிழ்நாடு முழுவதும் 24 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடிகளைக் கடந்த வாகன ஓட்டிகள் உயர்த்தப்பட்ட புதிய கட்டணங்களைச் செலுத்தி வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் பயன்பாட்டுக் கட்டணம் 5 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை உயர்த்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை - வானகரம், சூரப்பட்டு, பட்டரைபெரும்புதூர், நல்லூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதில் நல்லூர் சுங்கச்சாவடியில் 40 சதவிகிதம் அளவுக்கு சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியுடன் கூறினர். செங்கல்பட்டு அருகே பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் உயர்த்தப்பட்ட புதிய கட்டண வசூல் தொடங்கியுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சுங்கச்சாவடியிலும் நள்ளிரவு 12 மணி முதல் புதிய கட்டணம் வசூலித்து வருகின்றனர். ஏற்கெனவே பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்துவரும் நிலையில், சுங்கக்கட்டணத்தையும் உயர்த்தியிருப்பது பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். சுங்கக்கட்டண உயர்வால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரக்கூடும் என்று சரக்கு லாரி ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.