கொரோனா இரண்டாவது தவணை நிவாரணத் தொகையாக ரூ.2,000 , 14 மளிகைப் பொருள்களை வழங்குவதற்கான டோக்கன்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.
தமிழ்நாடு முழுவதும் வரும் ஜூன் 15 முதல் 2-ஆம் கட்ட கொரோனா நிவாரணத் தொகை ரூ.2000 மற்றும் 14 வகையான இலவச மளிகைப் பொருள்கள் விநியோகம் தொடங்கவுள்ளது. அரிசி பெறும் குடும்ப அட்டை தாரா்கள் அனைவருக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. அடுத்தடுத்த நாள்களில், அரிசியுடன் கூடிய 14 வகையான மளிகைப் பொருள்களும் வழங்கப்படவுள்ளன.
அந்தந்த ரேஷன் கடைகளில் இதற்கான டோக்கன் இன்று முதல் (ஜூன் 11) முதல் வரும் 14-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. இந்த டோக்கன்கள் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட உள்ளது. நியாய விலைக் கடைகளில் கூட்ட நெரிசல் இல்லாமல் மளிகைப் பொருள் தொகுப்பு மற்றும் நிவாரண நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு வசதியாக காலை 8 முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரையிலும் ரேஷன் கடைகள் செயல்பட உள்ளன.
ஏற்கெனவே, முதல் கட்டமாக கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.2,000 வழங்கப்பட்டது. இந்தத் தொகையை சுமாா் 2.07 கோடி பேர் பெற்றுள்ளனர். இந்த நிலையில், இரண்டாவது தவணையாக கொரோனா நிவாரணத் தொகை அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.