தமிழ்நாடு

அரியலூர்: சமூக இடைவெளி இல்லாமல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் விநியோகம்!

webteam

அரியலூரில் சமூக இடைவெளி இல்லாமல் ரேஷன் அட்டைக்கு இரண்டு ஆயிரம் ரூபாய்க்கு டோக்கன் வழங்குவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின்‌ இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் இன்று முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முழு பொது முடக்கத்தினால் அரிசி ரேசன் அட்டை வைத்திருக்கும் பொது மக்களுக்கு இந்த மாதம் 2000 ரூபாய் அடுத்த மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இதனையடுத்து இரண்டாயிரம் ரூபாய்க்கான டோக்கன் ரேஷன் கடை ஊழியர்கள் சார்பில் பொதுமக்களுக்கு வீடு வீடாக வழங்கப்படும் என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று அரியலூர் மாவட்டத்தில் அதற்க்கான பணி தொடங்கியதை அடுத்து அரியலூர் பூக்கார தெருவில் ரேஷன் அட்டை வைத்திருக்கும் பொதுமக்களுக்கு அங்குள்ள கோவிலில் டோக்கன் வழங்கப்பட்டது.

இதனை பொது மக்கள் கூட்டமாக சமூக இடைவெளி இல்லாமல் நெருக்கத்துடன் நின்று டோக்கனை பெற்று வந்தனர். இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.