இந்திய கிராமப் பொருளாதாரத்தின் தந்தை எனப் போற்றப்பட்டவரின் நினைவு நாள் இன்று... யார் அவர்... பார்க்கலாம்
இந்திய பொருளாதாரத்தின் தந்தை இந்தியாவின் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் வந்த சிறப்பு ரயில்முன்னறிவிப்பின்றி மதுரையில் நின்றது. அதிலிருந்து பரபரப்பாக இறங்கிய ராஜேந்திர பிரசாத், கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த் ஒரு முதியவரைப் போய்ப் பார்த்து, “அய்யா… ஏன் இப்படிச் சிரமப்படுகிறீர்கள்?” என்று கண்ணீர் சிந்தினார். கதராடை, வெள்ளைத்தாடியுடன் படுக்கையில் கிடந்த அந்தப் பெரியவரின் பெயர் ஜே.சி. குமரப்பா. நாடு சுதந்திரம் பெற்றதும் பதவிக்காக போட்டி போட்டகாங்கிரஸ்காரர்களுக்கு மத்தியில்,டெல்லியின் ஆடம்பரம் பிடிக்காமல் கிராமத்தை நோக்கிவந்தவர் தான் குமரப்பா!
ஜோசப் செல்லத்துரை கொர்னீலியசாக 1892 ஜனவரி 4இல் தஞ்சாவூரில் பிறந்தவர் குமரப்பா. இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் படித்து மேற்கத்திய நாட்டவராகவே வாழ்ந்த அவர்,கதராடை குமரப்பாவாக மாறிய கதை வெகு சுவாரசியமானது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் படிக்கச் சென்ற குமரப்பாவிடம், ‘இந்தியா ஏன் இவ்வளவு ஏழ்மையாக இருக்கிறது? என சகாக்கள் கேள்வி எழுப்பினர்.
இந்தக்கேள்வியின் எதிரொலியாக Public finance and India’s poverty என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை எழுதிய குமரப்பா, அதை வெளியிடுவதற்காக 1929இல் இந்தியா வந்தார். கோர்ட் சூட்டுடன் காந்தியை சந்திக்கச் சபர்மதி ஆசிரமம் சென்றவர், ஓலைக்குடிசை, மண் தரை, கயிற்றுக் கட்டில் என ராட்டைச் சுற்றிக் கொண்டிருந்த காந்தியையும் அவரது எளிமையையும் கண்டார். பேசினார். குமரப்பாவின் வாழ்க்கை முறையே மாறியது.
குமரப்பாவின் தெளிந்த அறிவும் நேர்மையும் காந்தியடிகளை மிகவும் கவர்ந்தது. உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற காந்தி, தான் நடத்திவந்த ‘யங் இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை குமரப்பாவிடமே ஒப்படைத்தார். அதேபோல குஜராத் வித்யா பீடத்தில் பேராசிரியர் பொறுப்பு, கிராம கைத்தொழில் வளர்ச்சி நிறுவன தலைமைப் பொறுப்பு, பீகார் பூகம்ப நிதி வசூலுக்கான பொருளாளர் என்று பல்வேறு பொறுப்புகளை ஒப்படைத்தார் காந்தி. நேர்மையும், கறாரும் கொண்ட குமரப்பா, தனக்கு பதவி கொடுத்தவர் என்று காந்திக்கு எந்தச் சலுகையும் தரவில்லை. பீகார் பூகம்ப நிவாரண பணிகளைப் பார்வையிடச் சென்ற காந்திக்கு, அவர் கேட்டதைவிட குறைவான தொகையையே ஒதுக்கினார் குமரப்பா.
காந்திய கொள்கைகளை காந்தியைவிட தீவிரமாக கடைபிடித்தவர் குமரப்பா. காந்திய பொருளாதாரத்தையே சுதந்திர இந்தியா ஏற்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை பிரதமர் நேரு ஏற்காததால், காங்கிரஸில் தான் வகித்துவந்த அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகினார். அதேபோல ஆங்கிலேயே வைசிராயின் ஆடம்பர அரண்மனையில் இந்திய குடியரசுத் தலைவர் குடியேறியதை கடுமையாகக் கண்டித்த அவர், மாட்டுவண்டியில் சென்று தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். இந்தியாவில் டிராக்டர் அறிமுகப்படுத்தப்பட்டபோது, “டிராக்டர் சாணி போடுமா?” என்று கேட்ட இயற்கை விவசாயி அவர்.
வழிகாட்டுவதைவிட வாழ்ந்து காட்டுவதே மேல் என்று கருதிய குமரப்பா, 1954இல் தமிழ்நாட்டுக்குத் திரும்பி மதுரை மாவட்டம் தே. கல்லுப்பட்டியில் தங்கினார். அங்கிருந்த
காந்தி நிகேதன் ஆசிரமத்தை காந்திய பொருளாதார ஆய்வு மையமாகவும், இயற்கை விவசாயம் மற்றும் கிராம தொழில்கள் பயிற்சி மையமாகவும் மாற்றினார். வாழ்நாளின்
இறுதிவரையில் அங்கிருந்த மண் குடிசையிலேயே வாழ்ந்த குமரப்பா 1960- ல் இதேநாளில் மறைந்தார்.