தமிழ்நாடு

தொழிற் சங்கங்களின் போராட்டங்கள் முதல்.. இந்திய அணி வெற்றி வரை

தொழிற் சங்கங்களின் போராட்டங்கள் முதல்.. இந்திய அணி வெற்றி வரை

webteam

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற் சங்கத்தினர் இன்று நாடு தழுவிய போராட்டத்தை தொடங்கியுள்ளனர். போராட்டத்தில் சுமார் 25 கோடி பேர் பங்கேற்பர் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில், போக்குவரத்து சேவைகள், வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சிஐடியு, தொமுச, ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எம்எல்எஃப், விசிக தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட 10 தொழிற்சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபடவுள்ளனர்.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு இந்து ரக்ஷா தளம் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதற்கிடையில் நடந்தவற்றை மறந்து விட்டு மீண்டும் வகுப்புகளுக்கு திரும்ப வேண்டும் என மாணவர்களை துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்க‌‌லைக்கழகத்தில் நடந்து வரும் மாணவர்களின் போராட்‌டத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கலந்துகொண்டார். பல்கலைக்கழக மாணவர்களையும் ஆசிரியர்களையும் அடையாளம் தெரியாத கும்பல் கொடூரமாக தாக்கிய நிலையில் எதிர்த்து, பல்கலைக் கழகத்திற்கு வெளியே போராட்டம்‌‌‌ நடந்து வருகிறது. இந்நிலையில் ‌பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பல்கலைக்கழகம் சென்று மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேரை வரும் 22ஆம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அப்பெண்ணின் பெற்றோர் டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம் குற்றவாளிகள் நான்கு பேரையும் ஜனவரி 22 ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட உத்தரவிட்டிருக்கிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவர வசதியாக சுமார் 30 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை தமிழக‌ அரசு அறிவித்துள்ளது. 9ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 12 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்களை எடுத்தது. இதனை எதிர்த்து ஆடிய இந்திய அணி 17.3வது ஓவரிலேயே இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது.