தமிழ்நாடு

இன்றைய முக்கியச் செய்திகள் சில..

இன்றைய முக்கியச் செய்திகள் சில..

webteam

தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

யார் முட்டுக்கட்டை போட்டாலும் தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றும் உள்ளாட்சி தேர்தலை தடுக்க முடியாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற தென்காசி மாவட்ட தொடக்க விழாவில் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 

கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் 106 ரன்களில் சுருண்டது வங்கதேசம். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்துள்ளது. 

உத்தவ் தாக்கரேவை மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக ஏற்பதில் கூட்டணி கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். எனினும் பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில் 3 கட்சிகளின் தலைவர்களும் இன்று செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர். 

மத்திய அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக உயர்த்த நடப்புக் கூட்டத்தொடரிலேயே சட்டத்திருத்த மசோதா கொண்டு வர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை என்று அத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.‌ மாநிலங்களவையில் இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

தமிழகத்தில் வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒருகிலோ சின்ன வெங்காயம் 100 ரூபாயை வரை விற்பனை செய்யப்படுகிறது.