தமிழ்நாடு

இன்றைய முக்கிய செய்திகள்..

இன்றைய முக்கிய செய்திகள்..

webteam

மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. எனவே நீர் திறப்பு அதிகரிக்கப்பட உள்ள நிலையில் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 2 மாதங்களில் 3ஆவது முறையாக நிரம்பியுள்ள மேட்டூர் அணை, 86 ஆண்டுகளில் 44வது முறையாக நிரம்பியது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாகவும், தமிழகத்தில் 21 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 2 தினங்களுக்கு மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தை பொறுத்தவரை ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் மண்டபம் பகுதிகளில் தலா18 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் விதித்திருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மறுவாக்கு எண்ணிக்கை முடிவை 23ம் தேதிவரை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ளது.

இந்தியா இரு பிரம்மோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது. நிலத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் உள்ள எதிரிகளின் இலக்கை தாக்கும்‌ திறன் படைத்த இரு பிரம்மோஸ் ஏவுகணைகளின் சோதனை அந்தமான் நிக்கோபரில் உள்ள திராக் தீவில் கடந்த 2 நாட்களில் நடைபெற்றது.

தமிழ‌க போக்குவரத்து ஊழியர்களுக்கு நாளை போனஸ் ‌வழங்கப்படும் என போக்குவரத்துத்‌துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதற்காக தமிழக அரசு சுமார் 206கோடி ரூபாய் ஒதுக்கீடு‌ செய்துள்ளதாகக் கூறினார்.