சென்னை மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்னை விரைவில் நிரந்தரமாக தீர்க்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விரைவில் மெட்ரோ ரயிலுக்கான இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்காவின் ஹுஸ்டனில் வரும் 22 ஆம் தேதி நடக்கும் ஹவுடி-மோடி நிகழ்ச்சியில், பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் கலந்து கொள்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பிரான்ஸில் கடந்த மாதம் நடந்த ஜி 7 உச்சி மாநாட்டின் போது, அதிபர் ட்ரம்பை சந்தித்த பிரதமர் மோடி, ஹுஸ்டனில் நடக்கும் நிகழ்ச்சியில் தன்னுடன் இணைந்து பங்கேற்கும்படி அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று, 50 ஆயிரம் இந்தியர்கள் மத்தியில் நடக்கும் நிகழ்ச்சியில் மோடியுடன், ட்ரம்பும் கலந்து கொள்கிறார்.
நவம்பர் மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் நடைபெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோது அவர் இதனை தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிப்பட்டினம் அருகே உள்ள பொச்சம்மா கோயிலில் இருந்து 63 சுற்றுலா பயணிகள், 9 பணியாளர்களுடன் பாபிகொண்டாலு என்ற சுற்றுலா தளத்தை நோக்கி படகு சென்றுக் கொண்டிருந்தது. கச்சுலுரு என்ற இடம் அருகே படகு சென்றுக்கொண்டிருந்த போது திடீரென கவிழ்ந்தது.
ஆவின் நிறுவனத்தின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வரும் 18ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது. ஆவின் நிறுவனம் கடந்த மாதம் பால் விலையை உயர்த்தியது. அதன் தொடர்ச்சியாக பால் பொருட்களான தயிர், நெய் உள்ளிட்டவற்றின் விலையும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலை உயர்வு காரணமாக, இவற்றின் விலை அதிகரிக்கப்படுவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.