தமிழ்நாடு

இன்றைய முக்கிய செய்திகள்..!

இன்றைய முக்கிய செய்திகள்..!

webteam

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக நேற்றிரவு 8 மணிக்கு அக்கட்சியின் காரிய கமிட்டியின் குழுக்கள் டெல்லியில் மீண்டும் கூடின. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின்போதும் ராகுல் காந்தியை தலைவராக தொடரும்படி வலியுறுத்தப்பட்டது. ஆனால் ராகுல் தமது முடிவில் அவர் உறுதியாக இருந்தார். இதற்கிடையில் கூட்டத்தில் இருந்து ராகுல் காந்தி வெளியே வந்ததால் புதிய தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிப்பதாக தகவல் பரவியது. பின்னர் சிறிது நேரத்தில் சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை செய்தியாளர்களிடம் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது. குஜராத், கேரளா, கர்நாடகா, மற்றும் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் தென் கர்நாடகா, தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கன மழையின் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை இன்றைக்கு மட்டுமே பொருந்தும். நாளை முதல் மழை குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெய்து வரும் கனமழை காரணமாக அவலாஞ்சி, கூடலூர், தேவாலா, பந்தலூர் போன்ற பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு ஸ்தம்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக பொதுமக்களுக்கு தேவையான பாய், போர்வை, குடைகள், உணவுப் பொட்டலங்கள் ஆகியவை நான்கு வாகனங்களில் எடுத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

காவிரியில் 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர் வருவதால், மேட்டூர் அணைக்கு ஒரு நாளைக்கு 12 முதல் 15 டி.எம்.சி. வரை நீர் வரக்கூடும் என மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதேபோல கிருஷ்ணசாகர் அணையிலிருந்து ஒரு லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் நீர் வந்து கொண்டிருந்தது. இதனால், அருவியில் குளிப்பதற்கும், பரிசல் இயக்குவதற்கும் தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மழை தொடர்பான விபத்துகளில் 114 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக வயநாடு மற்றும் கோழிக்கோடு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மேலும், எட்டு மாவட்டங்களில் 80-க்கும் மேற்பட்ட பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் ‌பாதிக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டுமென திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், காஷ்மீருக்கு அனைத்துக்கட்சி தலைவர்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அனுப்ப வேண்டும் எனத்தெரிவித்தார்.