சென்னை கனமழை
சென்னை கனமழை புதிய தலைமுறை
தமிழ்நாடு

சென்னை: மீண்டும் வெளுத்து வாங்கிய மழை.. 26 ஆண்டுகள் கழித்து மீனம்பாக்கத்தில் வரலாறு காணாத மழைப்பதிவு

PT WEB

சென்னையில் கடந்த சில தினங்களாக காலையில் வெயில் அடிப்பதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்வதும் தொடர்கதையாகியுள்ளது. அதேபோல், இன்றும் சென்னையில் வேளச்சேரி, தரமணி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பலத்த காற்றுடன், இடி சத்தத்துடன் மழை பெய்தது.

மீனம்பாக்கத்தில் வரலாறு காணாத மழைப்பதிவு

26 ஆண்டுகள் கழித்து மீனம்பாக்கத்தில் வரலாறு காணாத மழை பதிவாகியுள்ளது. ஜூன் ஒன்று தொடங்கி தற்போது வரையில் (தென்மேற்கு பருவமழை) காலகட்டத்தில் இந்த ஆண்டு 90 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 1996ஆம் ஆண்டு 87 செமீ பதிவானதே அதிகபட்சமாக இருந்தது. இந்த ஆண்டு பெய்த மழை அந்த அளவை தாண்டியது.

வேளச்சேரியில் முடங்கிய போக்குவரத்து

சென்னை வேளச்சேரியில் சிறிது நேரத்திற்கு முன்பு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. 30 நிமிடங்களுக்கு மேலாக பெய்த கனமழை காரணமாக நேதாஜி ரோடு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு 4வது பிரதான சாலை, முன்னாள் ராணுவத்தினர் குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் மழைநீர் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கிறது. இதனால் பணி முடித்து வீடு திரும்புவோர் மழை நீரில் வாகனத்தை இயக்க முடியாமல் அவதியடைந்தனர்.

சிலரது வாகனங்கள் நீரில் சிக்கிக் கொண்டன, சிலர் ஊர்ந்து சென்றனர். சிறிது நேரம் பெய்த மழைக்கே ஆங்காங்கே தேங்கி நின்ற மழை நீரால் பொது மக்கள் அவதிக்குள்ளாகினர்.

பெட்ரோல் பங்க் கூரை இடிந்து விழுந்து விபத்து - ஒருவர் பலி

சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 53 வயதான கந்தசாமி என்ற நபர் பலி, மேலும் மருத்துவமனையில் 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.