லஞ்சப்புகாரில் கைதாகியுள்ள கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் கணபதியின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவருக்கு பதவி உயர்வு வழங்க ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மற்றும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான துணைவேந்தர் கணபதி சார்பில் ஜாமீன் கேட்டு கோவை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
இதனிடையே துணைவேந்தர் கணபதி, மற்றும் பேராசிரியர் தர்மராஜ் கைது தொடர்பாக காவல்துறையினர் தங்களுக்கு முறையாக எந்த தகவலும் அளிக்கவில்லை என பதிவாளர் வனிதா கூறியுள்ளார். மேலும், முறைகேடு வழக்கில் 3ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குநர் மதிவாணன் இருநாள்களுக்கு விடுப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.