தமிழ்நாடு

எடை மேடையில் ஏற அடம்பிடித்த சங்கர் யானை - கரும்பு கொடுத்து சமாதானப்படுத்திய பாகன்கள்

webteam

உடல் எடையை பரிசோதனை செய்ய எடை மேடையில் ஏற அச்சப்பட்டு சாலைக்கு ஓடிய வளர்ப்பு யானை சங்கரை யானை பாகன்கள் கரும்பு கொடுத்து சாந்தப்படுத்தி எடை பரிசோதனை செய்தனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் யானைகளுக்கு 3 மாதத்திற்கு ஒரு முறை உடல் எடை பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்தாண்டு கூடலூரில் அடுத்தடுத்து 3 பேரை கொன்ற காட்டு யானை சங்கர் பிடிக்கப்பட்டு தற்போது தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வருகிறது. சங்கர் யானை தற்சமயம் முழுவதுமாக வளர்ப்பு யானையாக மாற்றப்பட்டிருக்கிறது. கடந்த முறை சங்கர் யானையை எடை பரிசோதனை செய்வதற்காக வனத்துறையினர் எடை மேடைக்கு கொண்டு வந்தனர். எடை மேடையில் ஏற அச்சப்பட்ட யானை சங்கரின் எடை கடைசி வரை வனத்துறையினரால் கணக்கிட முடியவில்லை.

இந்த நிலையில் இன்று மற்ற வளர்ப்பு யானைகளோடு சேர்த்து சங்கர் யானை மீண்டும் எடை பரிசோதனை செய்வதற்காக எடை மேடைக்கு கொண்டுவரப்பட்டது. ஆரம்பத்தில் எடை மேடையில் ஏறுவதற்கு சங்கர் யானை அச்சப்பட்டது. பாகன்கள் யானையை எடை மேடையில் ஏற்றுவதற்கு முயற்சி செய்தபோது, ஒரு கட்டத்தில் யானை சங்கர் சாலைக்கு ஓடியது. சங்கர் யானையை பாகன்கள் கரும்புகளை கொடுத்து சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்களின் நீண்ட முயற்சிக்கு பிறகு சங்கர் யானை எடை மேடையில் ஏற்றப்பட்டு எடை பரிசோதனை செய்யப்பட்டது. சங்கர் யானையின் எடை இயல்பான யானைகளின் எடை அளவில் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: வைகை ஆற்றில் அடுத்தடுத்து கரை ஒதுங்கும் சடலங்கள் - தொடர்கதையாகும் உயிரிழப்புகள்