அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் மார்ச் 21 முதல் ஏப்ரல் 21 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 8 போக்குவவரத்துக் கழகங்கள் மூலமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள நடத்துநர், ஓட்டுநர் பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் சேவை வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.
இந்தநிலையில்தான், இதுகுறித்தான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி, நாளை ( மார்ச் 21) முதல் ஏப்ரல் 21ஆம் தேதிவரை arasubus.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
எழுத்துத் தேர்வு, செய்முறை, நேரடி நேர்காணல் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. கும்பகோணம் மண்டலத்தில் 756 காலியிடங்கள், சேலத்தில் 486, சென்னையில் 364, நெல்லையில் 362, கோவையில் 344, மதுரையில் 322, விழுப்புரத்தில் 322, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 318 பணியிடங்கள் நிரப்பப்படும் என, சாலை போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.