தமிழ்நாடு

பொறியியல் சேர்க்கையில் டிடி பெற அவகாசம் தேவை: அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் சேர்க்கையில் டிடி பெற அவகாசம் தேவை: அண்ணா பல்கலைக்கழகம்

webteam

பொறியியல் மாணவர் ‌சேர்க்கைக்கான விண்ணப்பக் கட்டணத்தை மாணவர்கள் டிடி ஆக செலுத்துவதற்கு ஏற்றார்போல் மென்பொருளை மாற்றியமைக்க ஒருவார கால அவகாசம் வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் ஆதிகேசவலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்தும் வகையில் மென்பொருள் வடிவமைக்‌கப்பட்டுள்ளதால் டி.டி ஆக பெறுவதில் சிக்கல் இருப்பதாகக் கூறினார். மேலும் கடந்த 2 ஆண்டுகளாகவே இதுபோன்ற நடைமுறைதா‌ன் உள்ளது என்றும் இதுவரை 55 ஆயிரம் மாணவர்கள் எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறினார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வங்கிச் சேவை இல்‌லாத மாணவர்களிடம் டிடி ஆக பெற்றுக் கொண்டு அண்ணா பல்கலையின் கரண்ட் அக்கவுண்ட் மூலம் நெட் பேங்கிங்கில் பரிமாற்றம் செய்யலாமே எனக் கேள்வி எழுப்பினர். பின்னர், விண்ணப்பக் கட்டணத்தை டிடி ஆக பெற்றுக் கொள்கிறோம் என்றும் ஆனால் அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள மென்பொருளை மே 18க்குள் மாற்றிவிடுவதாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அண்ணா பல்கலையின் இறுதியான இந்த நிலைப்பாட்டை மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.