பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் இன்று இரவே சென்னைக்கு புறப்பட வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் சென்னையில் இருந்து இதுவரை 8 லட்சத்து 73 ஆயிரம் பயணிகள் வெளியூர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, “பொங்கல் முடிந்தபிறகு பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை மொத்தம் 22,676 பேருந்துகள் இயக்கப்படும்.
19 ஆம் தேதி அன்று 42,917 பயணிகள் பேருந்தில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளனர். பிற பயணிகள் கடைசிநேர கூட்ட நெரிசலை பயணிப்பதை தவிர்த்து தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, காலியாக உள்ள இருக்கைகளில் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளது.
அதாவது, நாளை மாலை முதல் ஒரே நேரத்தில் அனைவரும் சென்னை திரும்பினால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அதற்கு முன்பாகவே (இன்றே) தங்களின் பயண திட்டத்தை பயணிகள் மேற்கொள்ள போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியிருக்கிறது.