தமிழ்நாடு

“ராபிடோ செயலி மூலம் பயணிக்க வேண்டாம்” - போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்

webteam

ராபிடோ என்ற செயலியை பயன்படுத்தி இருசக்கர வாகனம் மூலம் மக்கள் பயணிக்க வேண்டாம் என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. 

இருசக்கர வாகனம் என்பது தனிநபருக்கானது. அதனை வணிக ரீதியாக பயன்படுத்தக்கூடாது என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு பயணிக்கும்போது விபத்துக் காப்பீட்டுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படும் என போக்குவரத்துத்துறை விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கெனவே கார் ஓட்டுநர்கள் போக்குவரத்துறையிடம் புகார் அளித்திருந்தனர். 

இந்நிலையில் சென்னையில் வாடிக்கையாளர்கள் போல, ராபிடோ செயலில் புக் செய்து, 37 இருசக்கர வாகனங்களை பிடித்து கார் ஓட்டுநர்கள் போக்குவரத்துறையிடம் ஒப்படைத்தனர். அத்துடன் இந்த செயலியை கூகுளில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக குறைகளை முன்வைத்துள்ள கார் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள், இது தங்கள் தொழிலை பாதிப்பதாகவும், மக்கள் இவ்வாறு பயணிப்பது பாதுகாப்பற்றது எனவும் கூறுகின்றனர்.