10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் Pt web
தமிழ்நாடு

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. இன்று வெளியிடுகிறார் அமைச்சர் ராஜ்மோகன்!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.

Premkumar S

தமிழகத்தில் மார்ச் 11 முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை மாநிலப் பாடத்தில் 10 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வினை 12,467 பள்ளிகளைச் சேர்ந்த 8,82,806 மாணவ மாணவிகளும், தனித்தேர்வர்கள் 26,196 பேரும் என மொத்தம் 9,09,002 பேர் எழுதினர். இதையடுத்து, மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்ற நிலையில், மதிப்பெண்களை பதிவு செய்யும் இறுதிகட்ட பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்பட்டது.

இந்தசூழலில் தான், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் உள்ள கூட்டம் அரங்கில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம், பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் எனவும் மாணவர்கள் தேர்வின்போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் SMS வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்வர்கள் தேர்வு முடிவுகள் குறித்த ஐயங்கள் ஏதேனும் இருப்பின் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுத்துறை இயக்கம் அறிவுறுத்தியிருக்கிறது.