தமிழ்நாடு

100% தேர்ச்சிக்காக மாணவர்கள் தேர்வு எழுதுவதை தடுத்தால் ஓராண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம்

100% தேர்ச்சிக்காக மாணவர்கள் தேர்வு எழுதுவதை தடுத்தால் ஓராண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம்

rajakannan

குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களை பொதுத் தேர்வு எழுத விடாமல் தடுக்கும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில், தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. 

தனியார் பள்ளிகளை வரன்முறைபடுத்தி, கட்டுப்பாடுகளோடு செயல்பட வைக்கும் வகையிலான சட்டதிருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தாக்கல் செய்தார். தனியார் பள்ளிகள் ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான சட்டம் விவாதத்திற்கு பின்னர் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

கல்வி வணிகமயமாதலை தடுக்கவும், முறையற்ற போட்டிகளை கட்டுப்படுத்தும் வகையிலும் தமிழக அரசு கொண்டு வந்த இந்தச் சட்டம், நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, குறைவான மதிப்பெண் பெற்று வந்தத மாணவர்களை பொதுத் தேர்வு எழுத தடுக்கும் பள்ளிகளின் உரிமையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இரண்டு தண்டனையையும் அளிக்க வாய்ப்புள்ளது. 

அனைத்து தனியார் பள்ளிகளிலும் கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழு, பள்ளிகளில் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளை நடத்தினால் அனைத்திற்கும் பொதுவாக கண்காணிப்புக்குழு ஒன்றினை அமைக்க வேண்டும். அந்த குழு நிர்ணயிக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கக்கூடாது.

விடுமுறை நாட்களை தவிர பள்ளி வகுப்புகளுக்கான நேரத்தில் நீட் பயிற்சி அளித்தால், தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் சட்டசபையில் தெரிவித்து இருந்தார்.