தமிழ்நாடு

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் அமைச்சர் தங்கமணி

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் அமைச்சர் தங்கமணி

webteam

மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அறிவிப்பு.

13 மாவட்ட விவசாய விளை நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் கூட்டமைப்பினர் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தில் அதிக அளவில் சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்படுவதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கை மீது அரசு உரிய கவனம் செலுத்தாததால், கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென விவசாயிகள் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டம், காத்திருப்பு போராட்டம் என பல்வேறு வகையில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார் என கூறியுள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் ஆட்சியில் விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைக்கப்பட்டதை சுட்டிகாட்டினார். முந்தைய ஆட்சியில் மின் கோபுரம் அமைத்தபோது விவசாயிகள் மீது இல்லாத கரிசனம் இப்போது வருவது ஏன் என எதிர்க்கட்சியினரை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்  உயர் மின்கோபுரங்கள் அமைக்கும் விவகாரத்தில், விவசாயிகளுடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார்.