ஜெ.பி.நட்டா, அண்ணாமலை
ஜெ.பி.நட்டா, அண்ணாமலை pt web
தமிழ்நாடு

என் மண் என் மக்கள்: ஜெ.பி.நட்டா பேரணி செல்ல இருந்த நிலையில் காவல்துறை அனுமதி மறுப்பு

Angeshwar G

வரும் நாடாளுமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். யாத்திரை தற்போது சென்னையின் சட்டமன்ற தொகுதிகள் வழியாக சென்று, இறுதிகட்டமாக பிப்ரவரி 25 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நிறைவடைகிறது. இறுதி நாளில் நடத்தப்படும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

J.B. Nadda

இந்நிலையில் ஒரு நாள் பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா நாளை (பிப்ரவரி 11) தமிழகம் வருகிறார். அவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தேர்தலுக்கான தயார் நிலையை மதிப்பீடு செய்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சென்னையில் பாத யாத்திரையாக சென்று கட்சிக் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி பாத யாத்திரைக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மேலும், பச்சையப்பன் கல்லூரி எதிரே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால், மின்ட் தங்கசாலையில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

இதேபோல், அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணத்திற்கு ஆவடியில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆவடி அண்ணா சிலையில் தொடங்கி 3 கிலோ மீட்டர் நடை பயணம் செல்ல முடிவு செய்யப்பட்ட நிலையில், நேரடியாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு மட்டும் அண்ணாமலை செல்ல ஆவடி காவல் ஆணையரகம் அனுமதி வழங்கியுள்ளது. நடைபயணத்திற்கு முறையாக அனுமதி கேட்கவில்லை எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.