10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் Pt web
தமிழ்நாடு

புதுக்கோட்டை முதலிடம்; மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி - வெளியானது 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

10-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வெளியிட்டுள்ளார்.

Premkumar S

தமிழ்நாட்டில் மார்ச் 11 முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை மாநிலப் பாடத்தில் படித்த 10 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில், அத்தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியிருக்கிறது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

அதன்படி, 8.70 மாணக்கர்கள் இந்த தேர்வை எழுதியிருந்த நிலையில், 8.21 லட்சம் மாணாக்கர்கள் தேர்ச்சியடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சதவீதமாக பார்க்கும் போது, 94.31% மாணாக்கர்கள் மொத்தமாக தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அதில், மாணவிகள் 96.47 சதவீத தேர்ச்சியும், மாணவர்கள் 92.15 சதவீத தேர்ச்சியும் பெற்றிருக்கிறனர். அந்தவகையில், இந்த தேர்விலும் வழக்கம்போல மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அதேபோல, கடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தைவிட 0.51 சதவிகிதம் அதிகம்.

அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டமாக 97.57 சதவிகிதத்துடன் புதுக்கோட்டை முதலிடத்தை பெற்றிருக்கின்றன. அதனைத் தொடர்ந்து, சிவகங்கை - 97.54%, தஞ்சாவூர் - 97.41%, திருச்சி - 97.31%, கன்னியாகுமரி - 97.30% போன்ற மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, தமிழில் 34 மாணாக்கர்கள், ஆங்கிலத்தில், 92 மாணாக்கர்கள், கணிதத்தில் 3,194 மாணாக்கர்கள், அறிவியலில் 10,476 மாணாக்கர்கள், சமூக அறிவியலில் 3,336 மாணாக்கர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றனர்.

தொடர்ந்து, மதிப்பெண் சான்றிதழ் மே 22 முதல் வழங்கப்படும், விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்பம் மே 22 - 27 வரை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. அதேபோல, தோல்வியடைந்தவர்களுக்கு மறுதேர்வு ஜூலை 8 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் மறு திருத்தம், மறு கூட்டலுக்கான விண்ணப்பம் ஜூன் 17 முதல் 19 வரை வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருக்கிறது.