பணி நிரந்தரம், சம்பள உயர்வு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த அடிப்படையில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் செவிலியர்கள், கடந்த 18 ஆம் தேதி முதல் 6-நாட்களைக் கடந்து இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை செவிலியர்களுடன் அமைச்சர் மா. சுப்ரமணியன் பேச்சு வார்த்தை நடத்தியிருந்த நிலையில், அந்த பேச்சு வார்த்தை தோல்வியை தழுவி இருந்தது. இந்த நிலையில், நேற்று கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போராட்டம் நடத்திய 500க்கும் மேற்பட்ட செவிலியர்களை காவல் துறையினர் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில், 7-வது நாளான இன்று செவிலியர்கள் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில்தான், இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுடன் காணொளி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்திய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் 1000 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும். தொடர்ந்து, படிபடிப்பாக மற்ற செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும். மேலும், இந்த கோரிக்கையை ஏற்று செவிலியர்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.