மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது சுகாதாரத்துறைக்கு மணிமகுடம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள மதுரை மாவட்டம் தோப்பூரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், இந்தியாவிலேயே வளர்ந்த மாநிலமான தமிழ்நாட்டிற்கு, எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு கொடுத்திருப்பது பெருமையளிப்பதாக தெரிவித்தார். 1,500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாகவும் இதற்கான நிலம், மின்சாரம், நான்கு வழிச்சாலை, குடிநீர் உள்ளட்ட அனைத்து வசதிகளையும் கொண்டுவர பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்காக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். தமிழக மருத்துவமனைகளை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த உலக வங்கியிடம் இரண்டாயிரத்து 685 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளதாகக் கூறினார். 590 கோடி ரூபாய் மதிப்பில் செங்கல்பட்டில் கட்டப்பட்டு வரும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார் என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.