உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் NGMPC22 - 168
தமிழ்நாடு

”15 லட்சம்னு சொன்னாங்க; 15 பைசா கூட போடல; ஆனா, கார்ப்பரேட்டுக்கு ரூ15 லட்சம் கோடி தள்ளுபடி”- உதயநிதி

webteam

திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக இளைஞரணியின் செயல்வீரர் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் மெய்யநாதன், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியல் அமைச்சர் மகேஸ் பேசுகையில்..

”சேலத்தில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி திமுக இளைஞர் அணியின் இரண்டாவது எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. அது வெற்றி மாநாடாக அமையும். மாநாட்டு மன்னன் என அழைக்கப்படும் அமைச்சர் கே.என்.நேரு அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகிறார். வருங்காலத்தில் தமிழகத்தை வழிநடத்தக் கூடிய தலைவராக உதயநிதி இருக்கிறார்” என்றார்.

udayanithi stalin

அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்...

”சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ள இளைஞரணி மாநாட்டுக்காக 84 ஏக்கர் பரப்பளவில் பணிகள் நடந்து வருகிறது. கட்சியின் தலைவரும், உதயநிதியும் எங்களை நம்பி மாநாட்டு பணியை ஒப்படைத்துள்ளனர். அதனை வெற்றி மாநாடாக மாற்றிக் காட்டுவோம். அந்த மாநாட்டுக்கான நிதியை திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பாக வழங்குவோம். அது வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான முன்னோடி மாநாடாக அமையும். அது உண்மையான இளைஞரணி மாநாடாக திகழும். வரும் பாராளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளையும் வெல்வோம் என உறுதியேற்கும் மாநாடாக அமையும்” என்றார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்...

”சேலம் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதற்காக திருச்சிக்கு வந்துள்ளேன். செயல்வீரர்கள் கூட்டத்தை கடந்த 10 நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் ஆரம்பித்தோம். பின்னர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்துவிட்டு, இன்று திருச்சியில் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறோம்.

minister udayanithi

திருச்சி என்பது தமிழகத்தின் மையப்புள்ளி மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் திருச்சி தான் மையப்புள்ளி திருச்சி என்றாலே திருப்புமுனை என்று நமது முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பலமுறை கூறியிருக்கிறார்கள். கழகத்தின் வரலாற்றில் திருச்சிக்கு மிகப்பெரிய பங்குண்டு. பேரறிஞர் அண்ணா திமுகவை தொடங்கிய பிறகு முதல் மாநாட்டை சென்னையில் நடத்தினார். இரண்டாவது மாநாட்டை திருச்சியில் நடத்தினார்.

கடந்த 9 ஆண்டுகால மோடியின் ஆட்சியில் அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் கருப்பு பணத்தை ஒழித்து சாமானியரின் வங்கிக் கணக்கில் ரூ15 லட்சம் போடுவதாக சொன்னார்கள். 15 பைசா கூட போடவில்லை. கடந்த 9 ஆண்டுகால மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ15 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளது. அதானி மோடியின் மிக நெருங்கிய நண்பர். உலகம் முழுவதும் விமானி இல்லாமல் கூட விமானத்தில் பிரதமர் செல்வார். ஆனால் அதானி இல்லாமல் எங்கும் செல்ல மாட்டார். நாட்டின் அனைத்து பொது சொத்துக்களையும் அதானியிடம் கொடுத்து வருகிறார்.

ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் வந்தது இந்தியா கூட்டணியின் முதல் வெற்றி. அந்த வெற்றி வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர வேண்டும்” என்று பேசினார்.