தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிலுவை நிதியை தாமதமின்றி தர வேண்டும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
டெல்லியில் மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லியை உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி சந்தித்தார். அப்போது 14வது மத்திய நிதி ஆணையத்தின் 2017-18ஆம் ஆண்டிற்கான 2ஆம் தவணை மானியத் தொகை விடுத்தமைக்காக நன்றி தெரிவித்தார். மேலும் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017-18ஆம் நிதி ஆண்டிற்கு அளிக்க வேண்டிய ரூ.560 கோடி மற்றும் 2018 -19ஆம் ஆண்டுக்கான மத்திய நிதி ஆணையத்தின் முதல் தவணை ரூ.1,600 கோடியை தாமதமின்றி தர வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, எம்பிக்கள் வேணுகோபால், மகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை அமைச்சர்கள் வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோர் நேரில் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் வேலுமணி, உலகத்தர நகரங்கள் பட்டியலில் பொன்னேரி, தூத்துக்குடியோடு, கோவையையும் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.