தமிழ்நாடு

“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்

Rasus

வாகனத் துறையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு விரைந்து நிதி ஒதுக்கி, பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை தடுக்க வேண்டும் என தமிழக அமைச்சர் பாண்டியராஜன் வலியுறுத்தியுள்ளார்.

வாகன விற்பனை தொடர்ந்து சரிவை கண்டு வரும் நிலையில் அத்துறை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். வெல்டிங், வார்ப்பு, உற்பத்தி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் கடும் நெருக்கடியில் இருக்கின்றன. வாகனத் துறையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி காரணமாக கடந்த சில மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதேபோக்கு இன்னும் 3 முதல் 4 மாதத்திற்கு நீடித்தால் கிட்டத்தட்ட பத்து லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள் சங்கம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு நிறுவனங்களில் இருந்தும் கிட்டத்தட்ட 10 சதவீத பணியாளர்கள், நிறுவனங்களால் பணி நீக்கத்திற்கு தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உடனடியாக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உற்பத்தி நிறுவனங்களும் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தமிழக அமைச்சரான பாண்டியராஜனும் இவ்விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “இந்தியாவிலேயே அதிகப்படியான வானத்துறை நிறுவனங்களை கொண்ட தமிழகத்திற்கு இது ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை மணி. எனவே மத்திய அரசு இவ்விவகாரத்தில் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான நிதி மற்றும் இதர சலுகைகள் அறிவித்து பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை தடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.