நெல்லையில் நடைபெற்ற விழா ஒன்றில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் “கடந்த தி.மு.க ஆட்சியில் இருட்டில் மின்சாரத்தை தேடவேண்டிய நிலையிலும், சர்வாதிகாரத்தின் உச்சத்திலும், கலைத்துறையிலும், காவல்துறையிலும் அவர்களின் தலையீடுகளும் இருந்தது. தி.மு.க பதவி வெறிபிடித்து அலைகிறது. தி.மு.கவில் ஜனநாயகம் இல்லை, இளவரசராக இருந்த ஸ்டாலின் தற்போது மன்னராக முடி சூட்டியுள்ளார். மன்னராக முடிசூடி தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.எடப்பாடி அரசு ஒருநாள் கூட தாங்காது என்றனர். இப்போது 17 மாதங்களை தாண்டி 18 மாதங்களாக அடி எடுத்து வைக்கிறது என்றார்
மேலும் பேசிய அவர் “ஆயிரம் ஓட்டைகள் உள்ள சல்லடை ஒரு ஓட்டை உள்ள கொண்டை ஊசியை பார்த்து சொன்னது போல், தி.மு.க எதற்கு எடுத்தாலும் ஊழல் ஊழல் என்று கூறி வருகின்றது. இந்திய அரசியலில் ஊழலுக்காக ஒரு அரசு கலைக்கப்பட்டது என்றால் அது தி.மு.க தான், ஜெ., வழியில் செல்லும் அரசு எதையும் சந்திக்க தயாராக உள்ளது. சொல் அம்பு, அவதூறுகளை பற்றி எங்களுக்கு கவலை இல்லை, மக்களின் நலனே முக்கியம். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் திட்டங்களை நிறைவேற்றியதில் சிறந்த மாநிலமாக இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. விரைவில் இது முதலாவது இடத்தை எட்டி பிடிக்கும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும் மருது சகோதரர்கள் போல் உழைக்கின்றனர் என பெருமிதம் கொண்டார் உதயகுமார்.
தொடர்ந்து “டி.டி.வி தினகரன் எங்களை துரோகிகள் என்கிறார். நாங்கள் அவரின் குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்று வந்தவர்கள் இல்லை, அவர் எங்களை துரோகிகள் என்று கூற. நாங்கள் ஜெ.,யின் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்று வந்தவர்கள். டி.டி.வி பதவிக்கு வர துடிக்கிறார். அவர் 10 ஆண்டுகளாக எங்கே போனார்?. அண்ணா 50 ஆண்டு போராட்டத்திற்க்கு பிறகு முதல்வரானார். எம்.ஜி.ஆர். கலைத்துறையில் சாதித்து, மக்களை சந்தித்து முதல்வரானார். ஜெ., கிராமம் கிராமமாக சென்று கொள்கை பரப்பு செயலாளராக பணியாற்றி முதல்வரானார். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்த 14 லட்சம் தொண்டர்களை ஒன்றரை கோடி தொண்டர்களை ஜெ உருவாக்கினார்.
எடப்பாடி 50 ஆண்டு பொது வாழ்க்கையில் இருந்து பல பதவிகளை வகித்து, 13 தேர்தல்களை சந்தித்து முதல்வராக உள்ளார். இந்த ஆட்சியை கலைக்க வேண்டும், கலைக்க வேண்டும் என்று டி.டி.வி கூறி வருகிறார். கோலத்தையும், குருவி கூட்டையும், தேன்கூட்டையும் கூட பெண்கள் கலைக்க விரும்ப மாட்டார்கள். கலைப்பதையே நினைக்கும் நீங்கள் விரைவில் கலைந்து போவீர்கள். புழுவாக நினைத்து கொட்டுபவர்கள் மத்தியில், நாங்கள் புலியாக விஸ்வரூபம் எடுப்போம் என்றார்.