“கடந்த ஆட்சிக்காலத்தில், அன்றைய மூன்று முன்னாள் அமைச்சர்களின் சுயலாபத்தின் பேரில் கிடைக்கும் வருமானத்தை மட்டும் கருத்தில் கொண்டு மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது” என பேசியுள்ளார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மீனாட்சி அம்மன் கோவில் அருகே கட்டப்பட்டு வரும் வாகன நிறுத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட திட்ட பணிகளை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் இன்று ஆய்வு செய்தனர்.
அதன்பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்துள்ளது. பல ஆண்டுகள் கழித்து, தற்போது இந்த ஆய்வுக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. ஆய்வுக் கூட்டத்திற்கு முன்னர், இதுநாள்வரை ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருடன் ஆய்வு மேற்கொண்டுள்ளேன்.
ஆய்வின்போது, ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் ஜனநாயக முறைப்படி நடத்தப்படவில்லை என்பதும், இத்திட்டத்தின்மூலம் ஊழல் செய்தால் தங்களுக்கு அதிக வருமானம் வரும் என்றும் அன்றைய மூன்று அமைச்சர்கள் எதிர்ப்பார்த்து செயல்படுத்தி உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் கடந்த அரசின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரிடமும் கருத்து கேட்காமல் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தியுள்ளார்கள் அவர்கள்.
இப்படியாக மூன்று அமைச்சர்கள், தங்கள் சுயலாபத்துக்காகவே இதை செயல்படுத்தியுள்ளனர் என நான் குறிப்பிடுவதற்கு சிறந்த உதாரணம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி இருந்த பேவர் பிளாக் சாலையின் தற்போதைய நிலை. நன்றாக இருந்த அந்த சாலையை, ஊழலுக்காகவும் வருமானத்திற்காகவும் ஆசைப்பட்டு அன்றைய சில அமைச்சர்கள் செயல்பட்டுள்ளனர். இதுமட்டுமன்றி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் அனைத்தும் அடிப்படை தவறாக உள்ளது. பேவர் பிளாக் சாலையில் அகற்றி, அங்கு ஆற்று மணல்களை கொட்டி, பின்னர் கருங்கற்களை பதித்துள்ளனர். தற்போது கருக்கற்களில் அதிக சூடு ஏற்படுவதாக கூறி, பின்னர் அதில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கின்றனர். இதுபோன்ற அறிவாளித்தனமான வேலைகளைத்தான் கடந்த ஆட்சியினர் செய்துள்ளனர். போலவே, வைகை ஆற்றங்கரையில் இத்திட்டத்தின் கீழ் போடப்பட்ட சாலைகளில் பல இடங்களில் பிளவு ஏற்பட்டு உள்ளது. அந்தளவுக்கு பணிகள் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்று அனைத்து முறைகேடுகளும் மத்திய மாநில அரசின் தணிக்கை துறை மூலம் கூர்ந்து கண்காணிக்கப்பட்டு, ஒவ்வொரு விவகாரம் குறித்தும் விசாரணை நடத்தப்படும்.
மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், ஒரு திறப்பு விழாவிற்கு சென்ற போது ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் கட்டப்பட்ட தரைதளம் உடைந்து விழுந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். அதுபோன்ற ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக தான் நாங்கள் இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றோம். எங்களது அரசு, மக்கள் பணத்தை எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். அதை கடமையாக கொண்டு செயல்படுகின்றோம்.
‘வருமானம் வரக்கூடிய திட்டங்களில், கொஞ்சம் அரசு நிதியும் கொஞ்சம் கடனும் பெற்று செய்தால் அதில் வரும் வருமானத்தை கொண்டு கடனை அடைக்க உதவியாக இருக்கும். சேவை மனப்பான்மையுடன் செய்யப்படும் திட்டங்கள் முழுமையாக அரசு நிதியில் இருந்து செய்ய வேண்டும்’ என்பதே எங்கள் நிலைப்பாடு. ஆனால் கடந்த ஆட்சியில் அப்படியில்லை. பெரியார் பேருந்து நிலையம் முழுமையாக மக்கள் நிதியில் கட்டப்பட்டுள்ளது. அது முற்றிலும் தேவையற்றது. இதுமட்டுமன்றி பெரியார் பேருந்து நிலையத்தின் கடைசி நேரத்தில் திட்டத்தில் கூடுதல் நிதியை முறைகேடு செய்வதற்காக ஒதுக்கி உள்ளனர். இப்படி நிதியை அடுக்கடுக்காக வீணாக்கியுள்ளனர். பொதுவாக பள்ளிகள் சுகாதாரத்தை மேம்படுத்தும் கழிப்பறை, குளியல் அறை கட்டுவதற்கு மக்களின் பணத்தை பயன்படுத்தலாம். ஆனால் வருவாய் தரக்கூடிய திட்டங்களில் மக்களின் பணத்தை செலவு செய்ய கூடாது. அடுத்து வரும் ஆண்டுகளில் இவற்றை கருத்தில் கொண்டு திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும்.
முறைகேடுகளுக்கு இடையே, இப்பணி தாமதப்படுத்தப்பட்டும் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தாமதமாக உள்ள அனைத்து பணிகளையும் திட்டங்களையும் இனி எவ்வாறு சிறப்பாக விரைந்து மேற்கொண்டு முடிக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வுகள் செய்து வருகின்றோம். உதாரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே வாகனம் நிறுத்தத்திற்காக கட்டப்பட்டுள்ள வளாகத்தில், பொதுமக்கள் மற்றும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குளியலறை கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை போதுமான அளவு அமைப்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.
தொடர்புடைய செய்தி: ”ஆய்வகம்கூட இன்றி எப்படி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி நடத்துவது?”- பழனிவேல் தியாகராஜன் கேள்வி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தொலைநோக்குத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் ‘கட்டமைப்பு நிதி மேம்பாட்டு கழகம்’ மூலம் ஒதுக்கப்பட்ட 70 கோடி ரூபாய், ஒரு மக்கள் திட்டத்திலும் செயல்படுத்தப்படாமல் இருந்துள்ளது. இதனால் அந்தப் பணம் முழுக்க தண்ணீராக கரைந்து சென்றுள்ளது. இதுபோன்ற விஷயங்களையெல்லாம் ஆராய்ந்து வருகிறோம். எங்கள் ஆட்சியில் இந்த தவறு நடக்காது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்தபிறகு, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து, அவர்கள் கருத்துடன் ‘இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தலாம்’ என்று கருத்துக்கள் கேட்டு தான் இனி புதிய திட்டங்களை நாங்கள் செயல்படுத்துவோம். திட்டங்கள் அதிகம் கொண்டுவர கொண்டுவர, வளர்ச்சி அதிகரிக்கும். அதன் மூலம் பொருளாதாரம் மேம்படும்.
தமிழக முதல்வர் ஏற்கனவே கூறியது போல் கட்சி வேறுபாடின்றி யார் மீது எங்கெங்கு குற்றச்சாட்டு உள்ளதோ காழ்புணர்ச்சி இல்லாமல், உரிய ஆதாரம் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்த அரசியல்வாதிகளை மட்டும் பேசாமல், அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் பழி வாங்குவதென்று எதுமில்லை. இவர்களை தண்டிப்பதை போலவே, மக்களின் நிதியை முறையாக எவ்வாறு செலவிடுவது என்பது குறித்தும் எங்களுடைய பணிகள் இருக்கும். காழ்புணர்ச்சி காரணமாக இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மாறாக முறைகேடு செய்த அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் - அப்படி செய்தால் மட்டுமே எதிர்வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காது என்பதாலேயே நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது” என்றார்.
- நாகேந்திரன்.