இந்திய அளவில் தமிழ் சினிமாவுக்கு விருதுகள் இல்லை என்ற குறையை இந்த சினிமா போக்கும் என "ஒத்த செருப்பு" படம் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டியுள்ளார்.
நடிகர் பார்த்திபன் கடைசியாக ''கோடிட்ட இடங்களை நிரப்புக'' திரைப்படத்தை தயாரித்து இயக்கினார். அதற்கு பிறகு பல திரைப்படங்களில் நடித்து வந்த அவர், தற்போது 'ஒத்த செருப்பு' என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே. அதாவது பார்த்திபன் மட்டுமே இந்த படத்தில் நடித்துள்ளார். ஒரே கதாபாத்திரத்தை சுற்றி இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளதால் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பார்த்திபனின் இந்த புதிய முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஒத்த செருப்பு படத்தை தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் பேசிய வீடியோ பதிவை பார்த்திபன் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “அருமையான முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஒரே இயக்குநர், ஒரே நடிகர், ஒரே தயாரிப்பாளர் ஆகிய சிறப்புகளுடன் வெளிவரும் உலகத்தின் முதல் சினிமா என்ற பெருமையை தமிழ் சினிமாவுக்கு அளித்ததற்கு பாராட்டுக்கள். இந்திய அளவில் தமிழ் சினிமாவுக்கு விருதுகள் இல்லை என்ற குறையை இந்த சினிமா போக்கும். அதற்கு அரசின் சார்பில் என்னென்ன உதவிகள் செய்ய வேண்டுமோ அதனை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம்” என அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார்.
இந்த வீடியோ பதிவுடன், “அரசு மரியாதையென்பது.. அதிக கௌரவத்திற்குரியது!.. நன்றி மாண்பு மிகுந்தவருக்கு!” என பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார். ஒத்த செருப்பு திரைப்படம் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.