தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற 27 மாவட்ட ஊராட்சிகளில் ஆளும் அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் தலா 13 இடங்களை கைப்பற்றியுள்ளன. சிவகங்கையில் மொத்தமுள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்களில் இரு கட்சிகளும் தலா 8 இடங்களில் வென்றுள்ளன.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெற்றன. இதில், 27 மாவட்டங்களில் மொத்தமுள்ள 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநில அமைச்சருக்கு நிகரான மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளை கைப்பற்ற ஆளும் அதிமுகவும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் தீவிரம் காட்டின. மொத்தமுள்ள 27 மாவட்டங்களில் திமுக 13 இடங்களையும், அதிமுக 13 இடங்களையும் கைப்பற்றுகின்றன.
அரியலூர், கோவை, தருமபுரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தேனி, திருப்பூர், கடலூர், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களை அதிமுக கைப்பற்றுகிறது. கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா உதவியுடன் கன்னியாகுமரி மாவட்டத்தையும் அதிமுக கைப்பற்றுகிறது. திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகை, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், மதுரை ஆகிய மாவட்டங்களை திமுக கைப்பற்றுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 இடங்களில், இரு கூட்டணிகளும் தலா 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் வரும் 11-ஆம் தேதி நடைபெறும் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் யார் தேர்வு செய்யப்படுவார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.