5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் Pt web
தமிழ்நாடு

#ElectionResults | 5 மாநிலத் தேர்தல் முடிவுகள்.. 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை!

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

Premkumar S

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி அறிவித்தது. எஸ்.ஐ.ஆர்-க்குப் பிறகு, நடக்கும் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்பட்டது. இந்தசூழலில் தான், ஏப்ரல் 9ம் தேதி புதுச்சேரி, அசாம் மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதேபோல, தமிழ்நாட்டில், ஏப்ரல் 23-ம் தேதியில் ஒரே கட்டமாகவும் மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29-ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்தநிலையில் தான், 5 மாநிலங்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பது குறித்து தெரியவருவதற்கான வாக்கு எண்ணிக்கை இன்னும் சில மணிநேரங்களில் துவங்க இருக்கிறது. இந்நிலையில், 5 மாநிலங்களில் உள்ள கள நிலவரங்கள் குறித்துப் பார்க்கலாம்.

வாக்காளர்கள்

மேற்கு வங்கம்

294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலில், இதுவரை இல்லாத அளவாக 92.47 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 4 வது முறையாக ஆட்சி அமைக்கும் முனைப்பில் இருக்கும் நிலையில், பாஜக கடும் போட்டி தருகிறது. கடந்த ஏப்ரல் 29-ம் தேதி வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், பாஜகவுக்கு வாய்ப்பு மற்றும் திரிணாமுல் காங்கிரஸுக்கு வாய்ப்பு என இருவேறு முடிவுகளை தந்திருக்கின்றன. இந்தசூழலில் தான், மேற்கு வங்க தேர்தல் களத்தில் கடும் போட்டி நிலவுகிறது. 4 வது முறை மம்தா ஆட்சி அமைப்பாரா? அல்லது பாஜக மேற்கு வங்கத்தில் முதன்முறையாக ஆட்சி அமைக்குமா? என்பது இன்று தெரியவரும்.

கேரளா

140 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட கேரளா சட்டப்பேரவைத் தேர்தலில் 79.7 சதவீத வாக்கு பதிவாகி இருக்கிறது. 2021இல் 99 இடங்களை வென்ற இடது ஜனநாயக முன்னணி (LDF), கேரளா இதுவரை கண்டிராத ஒரு வரலாற்று சிறப்புமிக்க தொடர்ச்சியான மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது. 2021இல் 41 இடங்களுடன் பலவீனமடைந்த ஐக்கிய ஜனநாயக முன்னணியும் (UDF) தேர்தலில் வெற்றிபெறத் துடிக்கிறது. எனினும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியே வெற்றி பெறும் எனத் தெரிவித்திருக்கின்றன. கருத்துக்கணிப்புகள் பலிக்குமா என்பது இன்று தெரியவரும்.

தேர்தல் ஆணையம்

அசாம்

126 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக கூட்டணி மீண்டும் தக்கவைக்கும் நோக்கில் முனைப்புடன் செயல்பட்டிருக்கிறது. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 64 இடங்கள் என்ற பெரும்பான்மை கிடைக்க வேண்டும். 2.5 கோடி வாக்களர்களை கொண்ட அசாமில் கடந்த 2021 ஆம் ஆண்டுத் தேர்தல் பாஜக 60 இடங்களை கைப்பற்றியிருந்தது. இதையடுத்து, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைத்தது. காங்கிரசிற்கு கடந்த தேர்தலில் 29 இடங்கள் மட்டுமே கிடத்திருந்தன. இத்தேர்தலில் பாஜக வென்றால், தொடர்ச்சியாக 3 வது முறை அசாமில் ஆட்சி அமைக்கும். இந்த சூழலில் தான், நடந்து முடிந்த தேர்தலில், 85.91 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது. ஏப்ரல் 29 தேதி வெளியான கருத்துக் கணிப்புகள், பாஜகவுக்கு சாதகமாகவே வந்திருக்கின்றன.

புதுச்சேரி

30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் வெற்றி பெற 16 தொகுதிகளைப் பெற வேண்டும். இந்த நிலையில், என்.ஆர். காங்கிரஸ் - பாஜக தலைமையிலான கூட்டணி இடையேயும் காங்கிரஸ் - திமுக கூட்டணி இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது. 2021 தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இம்முறையும் அக்கூட்டணியே வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெளிவு படுத்தியிருக்கின்றன. எனினும், 9,50,639 புதுச்சேரி வாக்களர்களின் முடிவு என்ன என்பது இன்றைய வாக்கு எண்ணிக்கைக்கு பிறகே தெரியவரும்.

புதுச்சேரி சட்டப்பேரவை

தமிழ்நாடு

234 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில், வரலாற்றில் முதன்முறையாக 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. திமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் முனைப்புடன் தமிழ்நாடு முழுவதும் சுற்றி சுழன்று தேர்தல் பணிகளை செய்திருக்கும் நிலையில், அதிமுக கூட்டணி மற்றும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை திமுகவுக்கு கடும் சவால் அளிக்கின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை திமுக வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருந்தாலும், அதிமுகவுக்கு சாதகமாகவும், தவெகவுக்கு சாதகமாகவும் சில கருத்துக் கணிப்புகள் வந்திருக்கின்றன. இந்தசூழலில் தான், தமிழக மக்கள் பெரும் எதிர்பார்த்து காத்திருந்த தமிழ்நாடு சட்டபேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்னும் சில மணி நேரங்களில் துவங்கவிருக்கிறது.