தமிழ்நாடு

உதய் திட்டத்தில் 21ஆவது மாநிலமாக இணைந்தது தமிழகம்

webteam

மின்சார விநியோக நிறுவனங்களின் நிலையை சீர்திருத்த வகை செய்யும் உதய் மின் திட்டத்தி‌ல் 21ஆவது மாநிலமாக தமிழகம் இணைந்தது.

இதற்காக டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் உதய் திட்டத்தில் தமிழகம் இணைவதற்கான ஒப்பந்தத்தில் மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் முன்னிலையில் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி கையெழுத்திட்டார். உஜ்வல் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா என்ற பெயரின் முதல் எழுத்துக்களின் சுருக்கமே உதய் எனப்படுகிறது.

கடந்த 2015- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தில், மூன்று மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. மேலும், இந்த திட்டத்தில் இணைவதால் தமிழக அரசுக்கு சுமார் ரூ.11,000 கோடிக்கு பயன்கிடைக்கும் என்றும் கருதப்படுகிறது. உதய் திட்டத்தில் ஏற்கனவே பெரும்பாலான மாநிலங்கள் இணைந்துள்ள நிலையில், அதன் சில அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு இணையாமல் இருந்து வந்தது. எனினும், இதுதொடர்பாக மத்திய அரசுடன் கடந்த மாதத்தில் இருந்து பேச்சுவார்த்தை நடந்த நிலையில், உதய் திட்டத்தில் தமிழ‌க அரசு இணைந்துள்ளது.