ஜம்மு-காஷ்மீர் எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சுரேஷின் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.
டெல்லியிலிருந்து விமானம் மூலம் கோவை கொண்டுவரப்பட்ட சுரேஷின் உடல், சாலை மார்க்கமாக ராணுவ வீரரின் சொந்த ஊரான தருமபுரி மாவட்டம் பண்டாரசெட்டிப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, உறவினர்கள், கிராம மக்கள் அனைவரும் சுரேஷின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து ராணுவ வீரரின் சொந்த ஊரான பண்டாரசெட்டிப்பட்டி மயானத்தில் அவரது உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் பங்கேற்ற அமைச்சர் அன்பழகன் தமிழக அரசு அறிவித்த 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை சுரேஷின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.
காஷ்மீரில் இந்திய-பாகிஸ்தான் எல்லையான ஆர்.எஸ்.புராவில், 78வது பட்டாலியனில் பணியாற்றி வந்த சுரேஷ்,ரோந்து பணியில் ஈடுபட்ட போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில், தலையில் படுகாயமடைந்த சுரேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.