பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ள நிலையில், பயணிகளுக்காகக் கூடுதல் பெட்டிகளை ரயில்வே துறை இணைத்து வருகிறது.
தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பேருந்து கட்டண உயர்வுக்குப் பிறகு, ரயில்களில் பொதுமக்கள் கூட்டம் குவிந்துள்ளது. ஏனெனில் உயர்த்தப்பட்டுள்ள பேருந்து கட்டணத்தோடு ஒப்பிடுகையில் ரயில் கட்டணம் சுமார் 30% முதல் 50% வரை குறைவாக உள்ளது. இதன் காரணமாக, அனைத்து ரயில்களிலும் கூடுதல் புக்கிங் ஆகி வருவதால், வெயிட்டிங் லிஸ்ட் எண்ணிக்கை சில ரயில்களில் 100க்கும் மேல் சென்றுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சக உறுப்பினர் ஆசிர்வாதம் ஆச்சாரி, “பயணிகளின் சேவைக்காக எந்தெந்த ரயில் வண்டிகளில் கூடுதல் பெட்டிகளை இணைக்க முடியும் என்று சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. முடிந்த வரை ஒவ்வொரு ரயில் வண்டியிலும் கூடுதலாக ஒரு பெட்டிகளை இணைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். இவ்வாறு இணைக்கப்படும் கூடுதல் பெட்டி மூலம் சுமார் 70 முதல் 100 பயணிகள் கூடுதலாக பயணிக்கலாம். திருச்சி டிவிஷனைப் பொறுத்தவரை தஞ்சாவூர் - சென்னை உழவன் எக்ஸ்பிரஸ் வண்டியில் கூடுதலாக 2 கோச்சுகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், பிற ரயில்களில் இணைக்க 15 கூடுதல் கோச்சுகள் தேவைப்படுகின்றன. மதுரை டிவிஷனைப் பொறுத்தவரையில் சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் வண்டியிலும் 2 கோச்சுகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் முடிந்த வரை கூடுதல் கோச்சுகளை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.