தமிழ்நாடு

தமிழகத்திற்கு மீண்டு(ம்) வருகிறது நோக்கியா நிறுவனம்?

webteam

இந்தியா மற்றும் ஃபின்லண்ட் ஆகிய நாடுகளுடன் நோக்கியாவிற்கு இருந்த வரி பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து
தமிழகத்தில் மீண்டும் தைவான் நாட்டின் மின்பொருள் உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையை நிறுவ அரசு சார்பில்
முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையடுத்த திருபெரும்பதூரில் செயல்பட்டு வந்து நோக்கியா நிறுவனம் ரூ.21,000 கோடி அளவிலான
வரி பிரச்னையால் கடந்த 4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதுதொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் மத்திய, மாநில
அரசுகள் இணைந்து தற்போது புதிய ஒப்பந்தத்தை ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் தொடங்கவுள்ளன.

தற்போது ஆந்திராவில் செயல்பட்டு வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் சியோமி, நோக்கியா மற்றும் ஜியோனி உள்ளிட்ட மொபைல்களை
தயாரித்து வருகிறது. இதில் நோக்கியா மொபைல் தயாரிக்கும் தொழிற்சாலையை மீண்டும் திருபெரும்பதூர் அருகே அமைக்க
திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தகவல் அளித்துள்ள தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், “ஃபாக்ஸ்கான்
நிறுவனத்துடன் இணைந்து மீண்டும் நோக்கியா தொழிற்சாலையை தொடங்க புதிய முயற்சிகளை எடுத்து வருகிறோம். கடந்த வாரம்
தைவானில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தை தொடர்புகொண்டு பேசி, தமிழகத்தில் அதிக முதலீடுகளை மேற்கொள்ள
கேட்டுக்கொண்டுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “தமிழகத்தில் மீண்டும் நோக்கியா நிறுவனம் அமைய அனைத்து வாய்ப்புகளும் பிரகாசமாய் உள்ளது. ஏற்கனவே ஃபாக்ஸ்கான்
நிறுவனம் மூலம் 6,000 பேர் வேலை வாய்ப்பை அடைந்துள்ளனர். தற்போது நோக்கியா தொழிற்சாலை அமைந்தால் மேலும் 30,000
பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். எனவே அந்த நிறுவனத்தை புதுப்பிக்க தீவிர முயற்சி செய்கிறோம்” என்றும் கூறியுள்ளார்.