தமிழ்நாடு

ஆன்லைன் வகுப்புகள் மூலம் பழந்தமிழ் இலக்கியங்களை கற்றுக்கொடுக்க தமிழக அரசு திட்டம்

JustinDurai

பழந்தமிழ் மற்றும் தமிழ் இலக்கிய நூல்களை கற்க விரும்புவர்களுக்காக ஆன்லைன் வகுப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளது தமிழக அரசு.

இலக்கிய செழுமை மிக்க தமிழ் மொழியின் இலக்கிய நூல்களை ஆன்லைன் வகுப்புகள் மூலம் கற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது தமிழக அரசு. பழந்தமிழ் மற்றும் தமிழ் இலக்கிய நூல்களை கற்க விரும்புவர்களுக்கு வழிகாட்டியாக இந்த ஆன்லைன் வகுப்புகள் அமையும் எனவும், இந்த வகுப்புகள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வாயிலாக நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியின் செழுமையான வரலாறு மற்றும் கலாச்சாரத்தை கற்பவர்களுக்கு புரிய வைப்பதும், தமிழ் மொழியில் உள்ள சிறந்த இலக்கியங்களை ஆய்வு செய்து விளக்குவதும் இத்திட்டத்தின் நோக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆன்லைன் வகுப்புகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  மூன்று மாதங்கள் மொழி அறிமுகம் வகுப்பும், ஆறு மாதங்கள் சிறப்பு நிலை வகுப்பும் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து பல புதிய மாணவர்கள் இந்த ஆன்லைன் வகுப்பில் சேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டத்தை மேம்படுத்த மத்திய அரசு ஏற்கனவே ரூ.41.97 கோடி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பழந்தமிழ் மொழியின் சிறப்புகளை இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாட்டிலும்  வளர்க்க இந்த ஆன்லைன் வகுப்புகள் உதவும்  என செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.