தமிழக அரசு இருமொழிக்கொள்கையில் உறுதியாக உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
விருதுநகரில் தனியார் பள்ளியில் காமராஜரின் 117வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “அரசு பொறுப்பேற்ற பின்புதான் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை நினைவுபடுத்தும் விதமாக இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மாவட்ட வாரியாக அரசு உயர்நிலைபள்ளிகளில் படிக்கும் 15 மாணவர்களை தேர்ந்தெடுத்து ஊக்கப்படுத்தும் விதமாக 10,000, 20,000 வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ பொதுவாக தமிழக அரசு அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பின்பற்றிய இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளது. நவோதயா பள்ளிகளை பொறுத்தவரை அது சம்மந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், கருத்து கூற விரும்பவில்லை” என தெரிவித்தார்.