தமிழ்நாடு

திருவாரூரிலும் ரூ.1000 பொங்கல் பரிசு

திருவாரூரிலும் ரூ.1000 பொங்கல் பரிசு

webteam

திருவாரூரில் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

திருவாரூர் இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி தேதி நடைபெறும் என அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் திருவாரூரில் உடனடியாக அமலுக்கு வந்தது. இதையடுத்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் மும்முரம் காட்டின. திமுக சார்பில் பூண்டி கலைவானன், அமமுக சார்பில் காமராஜ் என வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டார். அதிமுக சார்பில் அறிவிக்கப்படவில்லை. இதுதவிர நாம் தமிழர் கட்சியும் தங்கள் வேட்பாளரை அறிவித்திருந்தது. ஆனால் தேர்தல் நடைபெறுவதில் சில சர்ச்சைகள் எழுந்தன. மற்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்தாமல் திமுக தொகுதியான திருவாரூருக்கு மட்டும் தேர்தல் நடத்துவது ஏன்? என கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இதனிடையே 2019ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் பொங்கலை கொண்டாட ஒரு குடும்பத்துக்கு ரூ.1000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.இந்நிலையில் திருவாரூர் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்படுவதாக இன்று காலை அறிவிப்பு வெளியானது. மேலும் தமிழக அரசின் கோரிக்கை ஏற்று தான் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. 

இதனைதொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் திருவாரூரில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் தமிழக அரசு அறிவித்த  பொங்கல் பரிசுப் பொருட்களை திருவாரூர் மாவட்டத்திலும் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட ரூ.1000 பரிசுத் தொகையையும் வழங்க தமிழக அரசு  உடனடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.