தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைவசம் மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆகிய இரண்டு துறைகளும் இருக்கின்றன. அமாலக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு பிறகு வரும் 28ஆம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்துவரும் செந்தில் பாலாஜிக்கு 2 அல்லது 3 நாட்களில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவரிடம் இருக்கும் துறைகள் வேறு அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்படுமா அல்லது முதலமைச்சரே கூடுதலாக இந்த துறைகளை கவனிப்பாரா என்ற கேள்வி எழுந்தநிலையில், இலாகா மாற்றம் தொடர்பான பரிந்துரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். ஆனால் முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் ரவி திருப்பியனுப்பினார்.
இலாகா மாற்றம் தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், இதை அரசாணையாக வெளியிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருக்கும் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை என இரண்டு இலாக்காக்களும் மற்ற அமைச்சர்களிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட உள்ளது.
மின்சாரத்துறையை பொறுத்தவரையில் நிதித்துறை அமைச்சராக இருந்து வரும் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வைத் துறையை பொறுத்தவரையில் அமைச்சர் முத்துசாமி இடமும் கூடுதலாக ஒப்படைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை விரைவில் தலைமைச்செயலாளர் இறையன்பு வெளியிடுவார் என்று தெரிகிறது.