தமிழக அரசு தனியாரிடம் இருந்து கூடுதல் விலைக்கு நிலக்கரி வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகமான TANGEDCO, மின் உற்பத்திக்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை வாங்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதானி குழுமத்திடம் இருந்து ஒரு டன் நிலக்கரி 5 ஆயிரத்து 8 ரூபாய்க்கும், ஸ்ரீ ராயல்சீமா நிறுவனத்திடம் இருந்து 4 ஆயிரத்து 936 ரூபாய்க்கும், யாசின் நிறுவனத்திடம் இருந்து 5 ஆயிரத்து 98 ரூபாய்க்கும் வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியாவிடம் ஒரு டன் நிலக்கரி 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய நிலையில் அதனை விட 150 சதவிகிதம் அதிக விலைக்கொடுத்து தமிழக அரசு தனியார் நிறுவனங்களிடம் இருந்து நிலக்கரி வாங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ஒரு முறை மட்டும் ஒப்பந்தப்புள்ளி கோரும் நடைமுறையை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தளர்த்தியுள்ளது. பருவமழை காரணமாக நிலக்கரி உற்பத்தி குறைந்திருப்பதும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு பதில் தமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகரிப்பது அவசியம், இதற்காக தேவைப்படும் பட்சத்தில் நிலக்கரியை தனியாரிடம் இருந்து கூட வாங்கிக் கொள்ளலாம் என தமிழ்நாடு மின் பகிர்மான கழக அதிகாரிகள் கூறுகின்றனர்.