Paracetamol syrup  web
தமிழ்நாடு

குழந்தைகளின் பாராசிட்டமால் சிரப்பில் 95% ஆல்கஹாலா? விளக்கமளித்த தமிழ்நாடு அரசு

குழந்தைகள் பயன்பாட்டிற்கான பாராசிட்டமால் சிரப் (paracetamol syrup) மருந்தின் ஒரு தொகுதி (batch) குறித்த பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் கழகம் (TNMSC) திட்டவட்டமாக மறுத்துள்ளது.

PT WEB

அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்ட குழந்தைகள் பயன்பாட்டிற்கான பாராசிட்டமால் சிரப்பில் 95 சதவீதம் ஆல்கஹால் இருப்பதாகப் பரவும் தகவல் முற்றிலும் வதந்தி என, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் விளக்கம் அளித்துள்ளது. இம்மருந்து பரிந்துரைக்கப்பட்ட அனைத்துத் தரப் பரிசோதனைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

அட்ராய்ட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்திடம் கொள்முதல் செய்யப்பட்ட குறிப்பிட்ட தொகுதி பாராசிட்டமால் சிரப், ஆய்வகச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அது உயர்தரமானது என சான்றளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (TNMSC).

Paracetamol syrup

சிரப்பில் 95 சதவீத ஆல்கஹால் இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துப் பதிலளித்த TNMSC, மருந்தியல் சார்ந்த சொற்களைத் தவறாகப் புரிந்துகொண்டதன் அடிப்படையிலேயே இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகத் தெரிவித்தது. மருந்து தயாரிப்புச் செயல்முறையின்போது பாதுகாப்புக் காரணியாகவோ அல்லது கரைப்பானாகவோ குறிப்பிட்ட அளவில் 95 சதவீதத் தூய்மை கொண்ட மருந்தியல் தரத்திலான எத்தனாலைப் (pharmaceutical-grade ethanol) பயன்படுத்த 'இந்திய மருந்தியல் தரநிலை' (Indian Pharmacopoeia) அனுமதி அளிப்பதாகவும், இதற்காகத் தயாரிக்கப்பட்ட இறுதி மருந்திலும் 95 சதவீத ஆல்கஹால் உள்ளது என்று அர்த்தமல்ல என்றும் அது விளக்கமளித்துள்ளது .

அந்த நிறுவனத்தின் தகவலின்படி, மருந்தியல் தரநிலைகளில் வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்கு உட்பட்டு, 60 மி.லி சிரப் தயாரிப்பில் 95 சதவீத எத்தனால் கலவை 10 சதவீதம் (v/v) என்ற அளவிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது