தமிழ்நாடு

தமிழக அரசு இன்று பட்ஜெட் தாக்கல் : புதிய அறிவிப்புகள், சலுகைகள் ?

தமிழக அரசு இன்று பட்ஜெட் தாக்கல் : புதிய அறிவிப்புகள், சலுகைகள் ?

webteam

2019-20ஆம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியதும் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மக்களவைத் தேர்தல் வரவிருப்பதால், பல புதிய அறிவிப்புகள், சலுகைகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் எனத்தெரிகிறது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசித்து முடித்தவுடன், இன்றைய பேரவை நிகழ்வு நிறைவடையும். 

இதனைத் தொடர்ந்து, கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படவுள்ளதால், பட்ஜெட் கூட்டத் தொடரில் துறைசார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், ஜூன் மாதத்தில் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

பட்ஜெட் கூட்டத் தொடரில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்ட விவகாரம், மேகதாது அணை, ஸ்டெர்லைட், கொடநாடு விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.