தமிழ்நாடு

நம்பிக்கை வாக்கெடுப்பில் நடந்தது என்ன..?: அறிக்கை அனுப்பினார் ஆளுநர்

Rasus

தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்தது என்ன என்பது குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நடைபெற்ற நிகழ்வுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடைபெற்ற சட்டசபை நிகழ்வுகள் தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என சட்டசபை செயலாளருக்கு ஆளுநர் உத்தரவிட்டார். இந்த நிலையில், சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அளித்த தகவல்களின் அடிப்படையில் ஆளுநர் குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி எந்தச் சூழலில் முதலமைச்சராக அழைக்கப்பட்டார், சட்டப்பேரவைக்குள் அதிமுகவின் இரு பிரிவினர் மற்றும் திமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து இந்த அறிக்கையில் விரிவான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையில் சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை முறையிட உள்ளார்.