ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி PT
தமிழ்நாடு

”வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடுவதே சனாதன தர்மம்” - திருவண்ணாமலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி

PT WEB

இரண்டு நாள் பயணமாக திருவண்ணாமலை சென்றுள்ளார் தமிழ்நாடு ஆளுநர் R.N. ரவி. பயணத்தின் இரண்டாவது நாளான இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தன் மனைவி மற்றும் மகளுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.

திருமஞ்சனம் கோபுர வழியாக உள்ளே வந்த அவருக்கு கோயிலின் சார்பாக பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அண்ணாமலையார் சன்னதிக்குள் சென்று வழிபட்டார் ஆளுநர். தொடர்ந்து உண்ணாமலை அம்மன் சன்னதிக்கும், பாதாள லிங்கம் சென்றும் வழிபட்டார். பின் அவருக்கு மாலை மரியாதையுடன் மரியாதை செய்யப்பட்டது.

பின்னர் கிரிவல பாதையில் நிருதிலிங்கம் என்ற இடத்திலிருந்து திரு நேர் அண்ணாமலை என்ற இடம் வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மனைவி மகளுடன் அவரும் கிரிவலம் நடந்து சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் தங்கியுள்ள ஹோட்டலுக்கு சென்றார். மேலும் ஆளுநர், தன் பயணத்திற்கிடையே திருவண்ணாமலை சாதுக்களை சந்தித்தார்.

அப்போது பேசிய ஆளுநர், “திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அசைவ உணவகங்களை அகற்ற இயன்றவரை முயற்சிப்பேன்” என தெரிவித்தார். பின் பேசிய அவர், "திருவண்ணாமலை சிவனின் பூமி. நினைத்தாலே முக்தி தரும் தலம் இது.

மற்ற நாடுகள் ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்டது. நமது நாடு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முனிவர்களால் உருவாக்கப்பட்டது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடுவதே சனாதன தர்மம். பாரத நாட்டின் ஆன்மிக தலைநகரம் தமிழகம்தான் என்பதை, நான் உணர்ந்துள்ளேன்” என தெரிவித்தார்.

மேலும் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வுகள் இன்று நடைபெற உள்ளது.