காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்காக தொடர்ந்து பேசி வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார்.
கிண்டியில் உள்ள ராஜ்பவனில் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது காவிரி விவகாரத்தில் ஏன் இதுவரை பேசவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, “காவிரி விவகாரம் என்னுடைய இதயத்தில் இருக்கிறது. நான் எப்போதெல்லாம் டெல்லி சென்றேனோ, அப்போதெல்லாம் காவிரி விவகாரம் தொடர்பாக பேசி உள்ளேன். ஆளுநர்கள் மாநாட்டில் காவிரி குறித்து நான் பேசினேன். தமிழகத்திற்கு காவிரி நீர் தேவை என்பது எனக்கு தெரியும், நானும் ஒரு விவசாயி தான். காவிரி விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் இன்றுக் கூட தொலைபேசியில் பேசினேன். மேலாண்மை வாரியத்துக்கான பணிகள் நடந்துகொண்டிருப்பதாக நிதின் கட்கரி தெரிவித்தார். காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமாக நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.